வி.ராம்ஜி
‘’மோகனே டப்பிங் பேசட்டும். குரலும் நல்லாருக்கு, தமிழும் நல்லாருக்குன்னு கலைஞர் சொன்னார். அதன்படி ‘பாசப்பறவைகள்’ படத்துக்கு டப்பிங் பேசினேன் என்று நடிகர் மோகன் தெரிவித்தார்.
எண்பதுகளில், மிகப்பெரிய வலம் வந்து ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் மோகன். தொட்டதெல்லாம் துலங்கும் என்பது போல், நடித்த படங்களிலெல்லாம் சூப்பர் ஹிட்டாயின. வெள்ளிவிழா கொண்டாடின. இருநூறுநாள், முந்நூறு நாள் என ஓடியதெல்லாம் எண்பதுகளின் சாதனைப் பதிவுகள். இதனால், வெள்ளிவிழா நாயகன் என்றும் சில்வர்ஜூப்ளி நாயகன் என்றும் கொண்டாடப்பட்டார் மோகன்.
சமீபத்தில், மோகனிடம் பேசுகிற சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர் மனம் விட்டுப் பேசியதில் இருந்து :
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். நடிகன் ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூட எனக்கு இருந்ததில்லை. இதை தற்செயல் என்றோ கடவுள் செயல் என்றோதான் சொல்லவேண்டும். பாலுமகேந்திரா சாரின் ‘கோகிலா’ என்கிற கன்னடப் படத்தில்தான் அறிமுகமானேன். அதுதான் முதல் படம்.
அதன் பின்னர், மகேந்திரன் சாரின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்திலும் பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்தேன். அதன் பிறகு வரிசையாக படங்கள் வந்தன.
’கிளிஞ்சல்கள்’ படமும் ‘பயணங்கள் முடிவதில்லை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து வரிசையாக படங்கள் வரத்தொடங்கின. இந்த சமயத்தில் டப்பிங் பேச வேறு யாரையாவது போடுவார்கள். நானும் அதைப்பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கலைஞரின் கதை, வசனத்தில் பூம்புகார் புரொடக்ஷன்ஸின் ‘பாசப்பறவைகள்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிவகுமார், லட்சுமி, ராதிகா எல்லோரும் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தின் ரிக்கார்டிங் பணிகள் தொடங்க இருந்த வேளையில், மோகனுக்கு டப்பிங் பேச வேறொருவரை அழைப்பது என லிஸ்ட் வைத்திருந்தார்கள்.
அந்தப் பட்டியலைப் பார்த்த கலைஞர், ‘ஏன் மோகனுக்கு டப்பிங்?’ என்று கேட்டார். ‘பல படங்களில் அப்படித்தான்’ என்றார்கள். ‘மோகனோட குரல் நல்லாத்தான் இருக்கு. அவர் பேசுற தமிழும் நல்லாத்தான் இருக்கு. மோகனையே டப்பிங் பேசச் சொல்லுங்க’ என்று கலைஞர் சொன்னாராம்.
அவர் சொன்னபடி, கலைஞரின் கதை வசனத்தில், ‘பாசப்பறவைகள்’ படத்தில், நான் தான் டப்பிங் பேசினேன். அதைக் கேட்டுவிட்டு, என்னை அழைத்து மிகவும் பாராட்டினார் கலைஞர்.
இதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி... நிறைய படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன். நானே எனக்குப் பேசியிருக்கிறேன். ஆனாலும் ‘பாசப்பறவைகள்’ படத்தின் போது கலைஞர் அவர்களே பாராட்டியது, வாழ்வில் மறக்கவே முடியாதது.
இவ்வாறு மோகன் தெரிவித்தார்.