தமிழ் சினிமா

ஆசியாவில் முதல் முறை: பார்த்திபனின் அடுத்த வித்தியாச முயற்சி

செய்திப்பிரிவு

'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தைத் தொடர்ந்து, பார்த்திபன் தனது அடுத்த படத்திலும் வித்தியாசமான முயற்சி ஒன்றைச் செய்யவுள்ளார்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து இந்தப் படத்தைத் தேர்வு செய்து அனுப்பாத காரணத்தால், பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது, ஆஸ்கர் விருதுக்கு நேரடியாக அனுப்பி வைக்க பார்த்திபன் முயன்று வருகிறார்.

இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன். இம்முறையும் வித்தியாச முயற்சியைக் கையில் எடுத்துள்ளார். ஒரே ஷாட்டில் முழுப் படத்தையும் எடுக்கவுள்ளார். உலக அளவில் பலரும் இந்த முயற்சியைச் செய்திருந்தாலும், ஆசியாவில் பார்த்திபன்தான் இந்த முயற்சியை முதலில் முன்னெடுக்கிறார். 'இரவின் நிழல்' எனப் பெயரிட்டு, படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

'இரவின் நிழல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பாரதிராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "'ஒத்த செருப்பு' திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குநர் வரிசையிலிருந்து உலக இயக்குநர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்ட என் பாசத்துக்குரிய பார்த்திபன்... இனிய புத்தாண்டான இன்று தொடங்கும் 'இரவின் நிழல்' உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும், தமிழனுக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பாய். வாழ்த்துகள். இவன் கவிதைக்காக உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

SCROLL FOR NEXT