நாயகர்கள் மது அருந்துவது போன்று காட்சிகள் வைக்காதீர்கள் என்று ஜாக்குவார் தங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாயகன் - நாயகி என இருவர் மட்டுமே நடித்து 10 நாட்களில் படமாக்கப்பட்டுள்ள படம் 'டோலா'. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் கே.ராஜன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது:
"டோலா’ படத்தை 10 நாட்களிலேயே முடித்திருக்கிறார்கள். நாமும் இதுபோன்று குறைந்த நாட்களில் ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்று பாக்யராஜிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
கதாநாயகன் ரிஷியை 4 வருடங்களாகத் தெரியும். அமைதியான, பண்புள்ள மனிதர். அவர் குணத்திற்கு நிச்சயம் வெற்றி பெறுவார். இப்படத்தின் ட்ரெய்லரையும், பாடல்களையும் பார்க்கும்போது ஒரு சில காட்சிகளில் பயம் ஏற்படும் அளவிற்குச் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். இவர்களின் கடின உழைப்பிற்கு இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.
திரைப்படத் தொழில் நன்றாக இருக்க வேண்டும், தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உழைக்கும் மாமனிதர் கே.ராஜன் சார். நியாயத்துக்கு மட்டுமே போராடுவார். சிறு படங்களுக்கு 100 திரையரங்குகள் வரை கிடைக்க வேண்டும் என்றுதான் போராடிக் கொண்டிருக்கிறோம். சிறு படங்கள் வந்தால் மட்டும்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும்.
மது அருந்துவது போல் காட்சிகள் வைக்காதீர்கள். ரவுடியாக நடிப்பவர்கள் மது அருந்துவது போல் நடித்தால் கூட பிரச்சினையில்லை. நாயகர்களுக்கு அதுபோன்ற காட்சிகளை வைக்காதீர்கள். நாயகர்கள் மது அருந்தும்போது , அதை அருந்தினால்தான் ஹீரோ ஆக முடியும் போல எனச் சிறுவர்கள் நினைக்கிறார்கள்".
இவ்வாறு ஜாக்குவார் தங்கம் பேசினார்.