அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மிண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். 'வலிமை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கத் திட்டமிட்டது படக்குழு. ஆனால், படத்தின் அரங்குகள் தயாராகாத காரணத்தால் டிசம்பர் 14-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
அதில் சண்டைக் காட்சி ஒன்றையும் மற்றும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பெரிய ஷெட்டியூலாக பொங்கல் முடிந்தவுடன், ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளனர். இதில்தான் படத்தின் முக்கியக் காட்சிகள், படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளன.
’வலிமை’ படத்தில் அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. யாமி கெளதம்தான் நாயகி என்று தகவல் வெளியாகியுள்ளது. அதையும் இன்னும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.
யுவன் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருவதையும், 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.