அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்துக்கு 'கோப்ரா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். 'ஆதித்ய வர்மா' படம் வெளியாகிவிட்டதால், தற்போது அஜய் ஞானமுத்து படத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு 'கோப்ரா' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது படத்தின் லோகோ வடிவமைப்பின் மூலம் இந்தத் தலைப்பை அறிவித்துள்ளனர். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தில் 10-க்கும் அதிகமான கெட்டப்களில் விக்ரம் நடிக்கவுள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.