பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கும்கி 2' படப்பிடிப்பில் பட்ட சிரமங்களை ஒளிப்பதிவாளர் சுகுமார் பகிர்ந்துள்ளார்
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தது குறித்து சுகுமார், "யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. அந்தவகையில் 'கும்கி' படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக 'கும்கி-௨' படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது.. இரண்டும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்ட கதைகள்.
யானை ஒன்று மட்டுமே இரண்டு படங்களையும் இணைக்கும் ஒற்றுமை பாலம்.. இந்தியாவுக்குள்ளேயே சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் 'கும்கி 2' படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம். முக்கால்வாசி கதைக்கு மேல் வனப்பகுதியிலேயே நடைபெறுவதால் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு புது அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கும்.
பொதுவாக யானைகளை ஏதாவது வண்டியில் ஏற்றித்தான் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.. ஆனால் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதிக்கோ மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட ஜீப்பில் பயணித்தாலே ஒன்றரை மணி நேரம் ஆகும்.. பெரிய வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் யானையை நடத்திக் கூட்டிச்செல்லக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனது.
அதன் பிறகுதான் படப்பிடிப்பு நடத்தத் துவங்குவோம். இந்த பயணத்தின்போது வேறு காட்டு யானைகள் வந்து விடும் அபாயமும் இருந்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த 40க்கு மேற்பட்ட ஆட்களைப் பாதுகாப்புக்காகத் தினசரி அழைத்துச் செல்வோம்.
இந்தப்பகுதியில் 40 நாட்கள் நாங்கள் தங்கியிருந்தபோது நல்ல இயற்கையான சாப்பாடு, சுத்தமான, மூலிகை அம்சங்கள் கொண்ட குடிநீர் என ஒரு புது வாழ்க்கை வாழ்ந்தது போல இருந்தது. 'கும்கி' படத்தை எடுத்த சமயத்தை விட, தற்போது முன்னேறியுள்ள தொழில்நுட்பம் இன்னும் எங்களுக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளக் கைகொடுத்தது
அதேசமயம் அவற்றைப் பயன்படுத்தி மொத்த படப்பிடிப்பையும் எந்தவித செயற்கை ஒளியும் இல்லாமல் இயற்கை ஒளியிலேயே படமாக்கி இருக்கிறோம்.. இயக்குநர் பிரபுசாலமன் கூட 'கும்கி' படத்தை விட இதில் நமக்குத் தாராளமாகச் செலவு செய்ய இன்னும் அதிகமாகவே பட்ஜெட் இருக்கிறது.. நீங்கள் இன்னும் நிறையப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று கூறியபோது வேண்டாமென திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.
காரணம் இந்த கதைக்கு இயற்கையான ஒளி இன்னும் வலுவூட்டுவதாக இருக்கும் என்பதால் ஒரு டார்ச்லைட் ஒளியைக் கூட இதில் பயன்படுத்தவில்லை.. இதை பரிசோதனை முயற்சியாக என்று சொல்வதை விட, இந்த படத்திற்குத் தேவைப்பட்டதாலும் அதேசமயம் இப்படியும் கூட படமாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்..
இதனால் படப்பிடிப்பு நேரம் எங்களுக்கு ரொம்பவே மிச்சமானது.. இயக்குநர் பிரபு சாலமனின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் இது சாத்தியமானது.. அதேசமயம் இந்த படத்தில் வி எஃப் எக்ஸ் பணிகளும் சிறப்பாக வந்திருக்கிறது.. கலகலப்பாக நகைச்சுவையாக நகரும் படம் என்றாலும் இதில் சென்டிமென்ட்டுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.