செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. விஷ்ணு விஷால் தயாரித்த இந்தப் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது. 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது மீண்டும் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஷ்ணு விஷால். 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, செல்லா அய்யாவு படத்தின் பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.
ஆனால், செல்லா அய்யாவு படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அவரும் படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'மாஃபியா', 'பொம்மை', 'இந்தியன் 2' மற்றும் 'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியா பவானி ஷங்கர். இந்தப் படங்களைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.