தமிழ் சினிமா

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் என்ன பிரச்சினை? - மனம் திறக்கும் கெளதம் மேனன்

செய்திப்பிரிவு

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் என்ன பிரச்சினை இருந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.

தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே இணையத்தில் பயங்கர ஹிட்டானது. இதனால் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் வெளியீடு தாமதமாகிக் கொண்டே வந்தது.

இறுதியில், வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் மீதிருந்த அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்து நவம்பர் 29-ம் தேதி வெளியிட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதற்கான காரணம் என்ன, படத்திலிருந்த பிரச்சினை என்ன என்பதை வெளிப்படையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.

அதில், "'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியீட்டுக்கு முன்பே, இந்தப் படத்தில் உள்ள பின்னணிக் குரல்கள் மக்களுக்கு ரொம்பவே பிடிக்கலாம். அல்லது பிடிக்காமல் கூடப் போகலாம் என்று நானே சொல்லியிருக்கிறேன். அதை ரசித்தவர்களும் இருக்கிறார்கள். ரொம்ப ஓவராக இருந்தது என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். தனுஷ் இந்தக் கதையைப் படித்துவிட்டு, இதிலிருந்து வாய்ஸ் ஓவர்ஸ் ரொம்பவே பிடித்துள்ளது என்று தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அந்தப் படத்திலிருந்த வாய்ஸ் ஓவர்ஸ் வேறு மாதிரி டப்பிங் பண்ண வேண்டும் என நினைத்தேன். தனுஷ் இப்படிப் பண்ணினாலே போதும் என நினைத்தார். அதில் இருவருக்கும் மாற்றுக் கருத்து இருந்தது. அவர் இப்படித்தான் பண்ண வேண்டும் என நினைத்ததால் விட்டுவிட்டேன். ஆகையால் அது தான் சரியாக வரவில்லை எனச் சொல்லவில்லை.

இந்தப் படம் இப்படித்தான் இருக்கும் என்று தான் வடிவமைத்திருந்தேன். அதில் இரண்டாம் பாதியில் உள்ள காட்சிகள் அனைத்துமே, மாற்று ஏற்பாடாகத் தான் ஷூட் செய்தேன். ஏனென்றால் முதலில் திட்டமிட்டதை என்னால் பண்ண முடியவில்லை. நடிகர்களின் தேதிகள், பணம் உள்ளிட்ட பல விஷயங்கள் இதற்குக் காரணம். அது என்னைப் பாதிக்கவே, மாற்று ஏற்பாடாக வைத்திருந்த திட்டத்தைத் தான் ஷூட் பண்ணினேன். அதுவும் என்னுடைய எண்ணத்திலிருந்து வந்ததுதான். அது மக்களிடையே போய்ச் சேரும் என நினைத்தேன். ஆனால், அது சேரவில்லை அவ்வளவு தான்" என்று தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.

SCROLL FOR NEXT