தமிழ் சினிமா

அரசியலை நான் தொழிலாக செய்யவில்லை- சரத்குமார் நேர்காணல்

மகராசன் மோகன்

‘வானம் கொட்டட்டும்’, ‘நா நா’, ‘ரெண்டாவது ஆட்டம்’, ‘பிறந்தாள் பராசக்தி’ மற்றும் புதிய வெப் சீரீஸ் என வருகிற ஆண்டில் சரத்குமாரின் திரைப் பங்களிப்பு பட்டியல் நீள்கிறது. இதற்கிடையே, மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்துக்காக விரைவில் இணையப் போகிறார் என்ற செய்தியும் வெளிவருகிறது. இந்த நிலையில் சரத்குமாருடன் ஓர் உரையாடல்..

அரசியல்வாதிகள் அனைவரும் உள் ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பரபரப்பில் இருக்கும்போது, நீங்களோ ‘நாட்டாமை’, ‘சூர்யவம்சம்’ காலகட்டத்துக்கு இணையாக நடிப்புக் களத்தில் இறங்கிவிட்டீர்களே..

பெரிய அளவில் தகவல் தொடர்பு உள்ள காலகட்டம் இது. இந்த சூழலில் ஒருவன் மாதம் முழுக்க ஒரே விஷயத்தை செய்ய அவசியம் இல்லை. மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் அரசியல் பணி செய்தாலே போதும். தவிர, சினிமாதான் எனக்கு தொழில். அரசியலை நான் ஒரு தொழிலாக செய்யவில்லை. பணியாக செய்கிறேன். கட்சி நடத்த, மக்கள் சேவையாற்ற சினிமாவில்தான் நான் சம்பாதிக்க வேண்டும். அதனால்தான் சமீபகாலமாக சினிமாக் காரனாகவும் வலம் வருகிறேன்.

மனைவி ராதிகா, மகள் வரலட்சுமியுடன் இணைந்து நடிக்கிறீர்கள் போல..

ஆமாம். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது ‘சூர்யவம்சம்’ படத்துக்கு பிறகு, ராதிகாவுடன் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அடுத்து நான், வரலட்சுமி, ராதிகா மூவரும் இணையும் ‘பிறந்தாள் பராசக்தி’ படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. கதையும், சூழலும் சரியாக அமைவதால் இதெல்லாம் சாத்தியமாகிறது.

திடீரென வெப் சீரீஸ் பக்கம் ஏன்?

புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் - துப்பறியும் கதை போல சுமார் 5 ஆண்டுகள் விரியும் ஒரு வெப் சீரீஸ் களம். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பெரிய அளவில் உருவாகிறது. ‘நீங்கள்தான் இதன் மையப்புள்ளி’ என தயாரிப்பு குழுவினர் கதையுடன் வந்தனர். அடுத்த களம் இதுதானே.. கலக்குவோம் என இறங்கியுள்ளேன்.

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்கு எப்போது புறப்படுகிறீர்கள்?

என்னமாதிரி கதாபாத்திரம் அது என்பது பற்றி இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர்தான் அறிவிக்க வேண்டும். நான் பெரிதாக பேச முடியாது.

நடிகர் சங்கத்தின் சமீபகால நிகழ்வுகள் குறித்து..

நானும், ராதாரவியும் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், நாங்கள் ஊழல் செய்துவிட்டோம்.. அப்படி.. இப்படி.. என்று எல்லோரும் வளைத்து வளைத்து விமர்சனம் செய்தனர். இன்றைக்கு என்ன நடக்கிறது என்று யாருமே கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்க வரலாற்றில் முதன் முறையாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வாகத்துக்கு வந்துள்ளது. கலைக் குடும்பத்துக்குள் ஒற்றுமை இல்லாததுதான் இதற் கெல்லாம் காரணம்.

கமல், ரஜினி இணைந்து அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு உள்ளதே?

‘‘நான் உள்ளே வந்ததும் நேரடியாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்’’ என்று சொல்லிக்கொண்டுதான் சிலர் உள்ளே வருகிறார்கள். அவர்கள் உள்ளூர் போட்டி, 20-20, ஒருநாள் போட்டி ஆகியவற்றில் விளையாடி இருக்கிறார்களா? கிரிக்கெட் விளையாடியே அனுபவம் இல்லாமல், எப்படி கேப்டன் ஆக முடியும்? சினிமாவில் இருந்து நேரடியாக முதல்வராக ஆசைப்படுவது அதுபோன்றதே. அது நகைச்சுவை தானே.

திரைத் துறையில் மகள் வரலட்சுமியின் பயணம், வளர்ச்சி பற்றி..

‘போடா போடி’ படத்தில் நடித்துவிட்டு அது வெளிவர வேண்டும் என சில காலம் காத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ஒரு தந்தையாக நான் அவருக்கு உதவி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்துவிட்டேன். அந்த நாட்களில் மகளுக்கு உதவி செய்ய தவறிவிட்ட ஒரு தந்தையாகவே என்னை கருதுகிறேன். இன்றைக்கு ஒரு நடிகையாக அவர் வெளிப்பட்டிருக்கும் இடத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துகள் மகளே!

SCROLL FOR NEXT