தனது படங்களின் பின்னணியில் உள்ள சுவாரசியங்களைத் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலமாகவே நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கிய அந்தப் படம் 2010-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'பீட்சா', 'சூது கவ்வும்' என்று தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தன்னை ஒரு முன்னணி நாயகனாக நிலை நிறுத்தியுள்ளார்.
இன்றுடன் (டிசம்பர் 24) விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு விஜய் சேதுபதிக்குப் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். #9YearsofVijaysethupathism என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நாயகனாக அறிமுகமாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தன்னுடைய படங்களின் கதாபாத்திரங்கள் குறித்தும், அதிலுள்ள சுவாரசியம் குறித்தும் விஜய் சேதுபதி பேட்டியளித்துள்ளார்.
அதில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இந்தப் படத்தில் நடிக்கும் போது என்னால் அந்தக் கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மேலும் அதில் பயத்துடன் நடித்தேன். ஏனென்றால் என்னை விட என்னைச் சுற்றி இருப்பவர்கள் நடிப்பதற்கான காட்சிகள் இருந்தன. நான் ஒரே வசனத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். பகவதி பெருமாள்தான், "யோவ், படம் வெளியானதும் எல்லோரும் உன்னை இந்த வசனத்தைச் சொல்லச் சொல்லி சித்திரவதை செய்வார்கள் பார்" என்று கூறினார். அதுதான் நடந்தது.
அந்த என்னாச்சு வசனத்துக்குப் பின் ஒரு கதை உள்ளது. என்னிடம் ஒரு பைக் இருந்தது. அதன் சாவியை நான் எப்போதும் எங்காவது வைத்துவிடுவேன், மறந்து விடுவேன். அப்படி ஒரு நாள் சாவியை எங்கே வைத்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கபோர்டிலா, டிவிக்கு மேலா, ஹாலிலா, என்னடா...ம்ம்ம் என்னாச்சு? என்று யோசித்தேன். அப்போதுதான் அந்த வசனம் பிறந்தது.
பீட்சா
இந்தப் படத்துக்குத் தயாரிப்புடன் சென்றேன். 30 நிமிடங்கள் தனியாக நடிக்கத் தேவையான நடிப்புப் பயிற்சிப் பட்டறைக்குச் சென்று வந்தேன். அது ஒரு செம்ம அனுபவம். நான் அனுபவிக்கும் பயத்தைப் பல விதமாகக் காட்ட வேண்டும். அதற்கு எனக்கு அந்தப் பயிற்சிப் பட்டறை உதவியது.
சூது கவ்வும்
இந்தக் கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பதென்றே தெரியாமல்தான் நடித்தேன். படம் முடியும் வரை நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை. நலன் குமாரசாமியின் பாணியைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. மீண்டும் நாங்கள் ’காதலும் கடந்து போகும்’ எடுக்கும்போதுதான் அந்தப் பாணி எனக்குப் புரிந்தது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, படம் முடியும் வரை நான் பதற்றத்தில் தான் இருந்தேன். அதிக ரத்த அழுத்தம் வந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஏனென்றால் என் கதாபாத்திரமும் பசுபதி கதாபாத்திரமும் சந்திக்கும் முதல் காட்சியில் நான் நன்றாக நடிக்கவில்லை என்று உறுதியாக நம்பினேன். அந்த 4 நாட்கள் எடுத்ததை மீண்டும் எடுங்கள் என்று கெஞ்சினேன். அதற்கான செலவை என் சம்பளத்திலிருந்து கழித்துக் கொள்ளுங்கள் என்று கூடச் சொன்னேன்.