தமிழ் சினிமா

திரையரங்க உரிமையாளர்களுக்கு டி.சிவா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

'குண்டு' மற்றும் 'காளிதாஸ்' படங்கள் தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்களுக்கு, தயாரிப்பாளர் டி.சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாரந்தோறும் படங்கள் வெளியாவதால், சில படங்கள் விமர்சனரீதியாக வரவேற்பைப் பெறும்போது அந்தப் படங்களுக்கு அடுத்த வாரம் திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்படுகிறது. இது திரையுலகில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினையாகும்.

சமீபத்தில் விமர்சனரீதியாக 'குண்டு' மற்றும் 'காளிதாஸ்' ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' மற்றும் கார்த்தி நடித்த 'தம்பி' ஆகிய பெரிய நாயகர்களின் படங்கள் வெளியீட்டால், 'குண்டு' மற்றும் 'காளிதாஸ்' ஆகிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்களுக்குத் தயாரிப்பாளர் டி.சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''சமீபத்தில் வெளியான 'குண்டு', 'காளிதாஸ்' போன்ற தரமான திரைப்படங்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இருந்தும், தொடர்ந்து வாரா வாரம் வெளியாகும் திரைப்படங்களால் கதையம்சம் கொண்ட தரமான திரைப்படங்கள் ஓட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு மேற்படி 'குண்டு', 'காளிதாஸ்' ஆகிய 2 திரைப்படங்களையும் முடிந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் மீண்டும் திரையிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு டி.சிவா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT