தனது இளமை மற்றும் மகிழ்ச்சியின் ரகசியம் என்ன என்பதை திவ்யதர்ஷினி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ளார்.
இவருக்குத் திருமணமாகி, விவாகரத்து ஆகிவிட்டது. தற்போது தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி உலகில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். முதன்முறையாகத் தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய இளமைக்கும், சந்தோஷத்துக்கும் காரணம் என்ன என்பதைப் பேசியுள்ளார் திவ்யதர்ஷினி
இது தொடர்பாக திவ்யதர்ஷினி பேசியதாவது:
"பள்ளி நாட்களில் இருந்து மீடியாவில் இருந்ததால், அந்த நாட்களை ரொம்பவே மிஸ் பண்ணியிருக்கேன். என்னுடைய இளம் வயதை மிஸ் பண்ணியிருக்கேன். நிறைய பேர் இன்னும் எப்படி இளமையாகவே இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அப்போது எல்லாம் இவர்கள் நம்மைக் கிண்டல் பண்ணக் கேட்கிறார்களா என யோசித்திருக்கிறேன்.
ஒரு நாள் உட்கார்ந்து யோசித்துத் தெரிந்துகொண்டேன். என்னுடைய பள்ளி வயது, இளம் வயதுக் காலத்தில் ரொம்பவே முதிர்ச்சியாக நடந்து கொண்டதாக நினைக்கிறேன். எனக்கு இப்போது 34 வயதாகிறது. என்னுடைய குடும்பத்துக்கான கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டேன். கடவுள் எனக்கு இப்போது கொடுப்பது அனைத்துமே எக்ஸ்ட்ரா தான். அதை முழுமையாக அனுபவித்து வருகிறேன். இப்போதும் குழந்தையாகவே நினைத்துக் கொள்வதால்தான் இன்னும் இளமையாகவே இருப்பதாகக் கருதுகிறேன்.
நிறைய இளம்பெண்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். சமூக வலைதளத்தையும் ஒரு மீடியமாக எடுத்துக் கொண்டு அதில் இருக்கிறோம். அதில் எவ்வளவு பேர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், வெற்றிக்கு ஒரு மந்திரம் இருக்கிறது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும், நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் என எதுவும் நடந்தாலும், நமது கேரக்டரை தவறாகப் பேசுவார்கள்.
திருமண முறிவு, உறவுகள் முறிவு என என்ன எந்தவொரு விஷயமும் உங்கள் மனதில் இருக்கலாம். ஆனால், காலையில் எழுந்து, நேரத்துக்கு மேக்கப் போட்டுச் சரியாக உங்கள் வேலையைப் பார்த்தால் வெற்றியை யாருமே உங்களிடமிருந்து எடுக்க முடியாது".
இவ்வாறு திவ்யதர்ஷினி பேசியுள்ளார்.