தமிழ் சினிமா

ரஜினி பேசச் சொல்லி நான் பேசுகிறேனா?- லாரன்ஸ் விளக்கம்

செய்திப்பிரிவு

ரஜினி பேசச் சொல்லி, லாரன்ஸ் பேசுவதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 'தர்பார்' இசை வெளியீட்டு விழா மற்றும் சென்னையில் நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் விழா இரண்டிலுமே நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் பேசியது தொடர்பாக, கமலை நேரில் சந்தித்து லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.

ஆனால், இரண்டு விழாக்களிலுமே சீமானை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார். இதனால், நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் லாரன்ஸைத் திட்டித் தீர்த்து வருகிறார்கள். இதனிடையே, ரஜினி நேரடியாக யாரையும் திட்ட முடியாத காரணத்தால், லாரன்ஸிடம் சொல்லி திட்டச் சொல்வதாகச் சிலர் செய்திகள் வெளியிட்டனர்.

இது தொடர்பாக லாரன்ஸ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு, இந்தச் செய்தி என்னுடைய ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கானது. 'தர்பார்' ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்து முடிந்ததிலிருந்து பலர் என்னிடம் பேட்டி வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் என்னுடைய படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் என்னால கொடுக்க முடியவில்லை.

படப்பிடிப்பு முடிந்ததும் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பேட்டி தருவேன். நீங்கள் எழுப்பிய கேள்விகள் மூலம் பொதுவான சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடைய பேச்சும், நான் பதிவிடும் ட்வீட்களும், இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்களும் முழுக்க முழுக்க என்னுடைய சுய சிந்தனைகளே.

இதற்கு தலைவர் ரஜினி பொறுப்பு கிடையாது. இப்படியெல்லாம் பேசச் சொல்லி அவர்தான் எனக்குக் கற்றுக் கொடுக்கிறார் எனப் பலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. அவருக்குப் பேச விருப்பமிருந்தால் அதை நிச்சயம் அவரே பேசுவார். தனது செல்வாக்கை ஒருவரிடம் செலுத்தும் நபரல்ல அவர். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட நான் விரும்பவில்லை.

ரசிகனாக ஒரு போட்டோவும், ஆசியும் தவிர அவரிடம் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. எந்த அரசியல் கட்சிக்கும் நான் எதிரானவன் இல்லை. எந்த நபருக்கும் நான் ஆதரவாளனும் இல்லை. நான் என்னுடைய வேலையைச் செய்து வருகிறேன். என்னுடைய குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும்போது அரசாங்கத்தை நாடுவேன். அவர்கள் உதவினால் நன்றி கூறி பதிவிடுவேன்.

இதைத் தாண்டி அரசியலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதலே நான் பல பிரச்சனைகளில் சிக்கவைக்கப் படுகிறேன். எனக்கும் இன்னொரு நபருக்கும் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் உருவாகி வருகிறது. எனவே, நான் பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறேன்.

என்னுடைய பிறப்பிடம், மொழி, வேலை பற்றியெல்லாம் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவை அனைத்துக்கும் நான் என்னுடைய வழியில் பதில் சொல்வேன். ஜல்லிக்கட்டு முதலே நான் அன்பான முறையில் சொல்லி வருகிறேன், இனியும் சிறந்த முறையில் சொல்ல முயற்சி செய்து அவர்களுக்கு அன்பான வழியில் புரிய வைப்பேன்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT