காணாமல் போன தம்பியாக நடித்து சொத்தை அடையத் துடிக்கும் ஒருவன், அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே மாறிவிடுவதுதான் ‘தம்பி’.
எம்எல்ஏ சத்யராஜ் - சீதா தம்பதியின் மகள் ஜோதிகா. அவர்களது மகனும், ஜோதிகாவின் தம்பியுமாகிய சரவணன், 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விடுகிறான். இதனால், அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. தம்பியின் பிரிவால், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார் ஜோதிகா.
திடீரென ஒருநாள் கோவா போலீஸ் இளவரசுவிடம் இருந்து சரவணன் கிடைத்துவிட்டதாக போன் வருகிறது. சத்யராஜும், அவருடன் இருக்கும் ஹரிஷ் பெராடியும் கோவா சென்று சரவணனை மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து வருகின்றனர்.
ஆனால், அது உண்மையான சரவணன் கிடையாது. கோவாவில் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கார்த்தி, இளவரசுவுடன் சேர்ந்துகொண்டு பணத்துக்காக சரவணன் போல் நடிக்கிறார். அவரை சரவணனாக அந்தக் குடும்பம் ஏற்றுக் கொண்டதா? பணத்துக்காக நடிக்கச் சென்ற கார்த்தி மனம் மாறினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
‘த்ரிஷ்யம்’ படத்தின் ஒன்லைன்தான் இந்தப் படத்தின் கதையும். அதே சென்டிமென்ட், த்ரில்லரை வைத்து புதிய கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். ஆனால், படத்தின் க்ளைமாக்ஸ் வரை அதே மாதிரியான கதைதான் இதுவும் என யோசிக்க முடியாதபடி திரைக்கதையை வடிவமைத்திருப்பது சிறப்பு.
திருட்டுத்தனமான அப்பாவி முகம், கார்த்திக்கு இயல்பாகவே கைகூடி வரும். இந்தப் படத்தில் திருட்டுத்தனத்துடன் அவர் காட்டும் ஒவ்வொரு ரியாக்ஷனும் ரசிக்க வைக்கிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமே விஷயத்தைத் தெரிந்துகொண்டு, அதை வைத்து அவர் நடிக்கும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. அதேசமயம், குடும்பத்தின் அன்பை உணர்ந்து, அவர்களுக்காக ஆக்ஷன் அவதாரம் எடுக்கும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
மனதுக்குள் அன்பை வைத்துக்கொண்டு, வெளியில் இறுக்கமான அக்காவாக ஜோதிகா. தம்பியைப் பார்க்க ஏங்கும் ஜோதிகா, சரவணனாக வந்த கார்த்தியை முதலில் வெறுத்தாலும், தனக்காக எதிரிகளைப் பந்தாடிய பிறகு அவர் மீது பாசம் காட்டுகிறார்.
காணாமல் போன மகன் மீண்டும் கிடைத்த சந்தோஷம், உண்மை வெளியில் தெரியாமல் இருப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் என சத்யராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். வழக்கமான அம்மாவாக வந்து போனாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் பார்வையாலேயே தன் முக்கியத்துவத்தை உணர்த்திவிடுகிறார் சீதா.
கார்த்தியின் காதலியாக வெறும் டூயட்டுடன் நின்றுவிடாமல், கதையின் திருப்பங்களுக்கு உதவியிருக்கிறார் நிகிலா விமல். மாஸ்டர் அஷ்வந்த், செளகார் ஜானகி சம்பந்தமான காட்சிகள், படத்தின் த்ரில்லைக் குறைத்து, கொஞ்சம் கலகலப்பாக்க உதவியுள்ளன. ஹரிஷ் பெராடி, அன்சன் பால், இளவரசு, பாலா, அம்மு அபிராமி என அனைவருமே கதைக்குத் தேவையான நடிப்பைத் தந்துள்ளனர்.
கோவாவில் வெளிநாட்டவரை கார்த்தி ஏமாற்றுவது, ஹரிஷ் பெராடியின் வன்மம் என சில காட்சிகள் ஊகிக்கும்படி உள்ளன. திருட வந்தவன் திருந்துவது ஆதிகாலத்துக் கதைதான் என்றாலும், அடுத்தடுத்து ட்விஸ்ட் வைத்து, திரைக்கதை இப்படித்தான் நகரும் என்ற பார்வையாளரின் எண்ணத்தைத் தகர்த்துவிடுகிறார் இயக்குநர்.
கோவா இன்ஸ்பெக்டர் இளவரசு ஊட்டியிலேயே தங்கியிருப்பது, சிறிய மலைக்கிராமத்தில் இருக்கும் மிகக்குறைந்த வாக்குகளுக்காக இவ்வளவு பெரிய திட்டம் தீட்டுவது, நல்லவரான பாலா ஏன் ரிஸார்ட் கட்டுவதற்குத் துணை போகிறார், சிறிய ஊரில் இருப்பவரை எதிர்க்கட்சித் தலைவர் என குறிப்பிடுவது என்று லாஜிக் மீறல்கள் பல இருக்கின்றன. இவையெல்லாம் கதையின் த்ரில்லுக்கு வலுசேர்க்கத் திணிக்கப்பட்டவையாகவே உள்ளன. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இவை இல்லாமலேயே த்ரில் கைகூடியிருக்கும்.
கோவிந்த் வசந்தாவின் இசையில், சின்மயி குரலில் ‘தாலேலோ’ பாடல், மனதை வருடும் ரகம். காட்சியமைப்புடன், பின்னணி இசையும் பொருத்தமாக இருந்தால் மட்டுமே கதையின் த்ரில் பார்வையாளனுக்கு முழுமையாகக் கடத்தப்படும். அந்த வகையில், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, இந்தப் படத்துக்குப் பக்கபலமாக உள்ளது.
சீதா, ஜோதிகா, நிகிலா விமல் என நடிகர்களைத் துடைத்துவைத்த குத்துவிளக்கு போல ‘பளிச்’செனக் காட்டியிருக்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா. கோவாவின் கலர்ஃபுல், மேட்டுப்பாளையத்தின் பசுமை இரண்டையும் மொத்தமாக லென்ஸ் வழியே எடுத்து வந்துள்ளார். இளவரசு தங்கியிருந்த இடத்துக்கு போலீஸ் ஜீப்பும், பைக்கில் கார்த்தியும் செல்லும் டாப் ஆங்கிள் காட்சி, அழகியல்.
‘ஒரு அக்கா, ரெண்டு அம்மாவுக்குச் சமம்’, ‘பசியைக்கூட தாங்கிடலாம், தனிமையைத்தான் தாங்கிக்க முடியாது’, ‘கூடப்பொறந்தா மட்டும் தம்பியாகிட முடியாது’ என மணிகண்டனின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்தப் படத்திலும் பேசிய குடும்பத்தின் முக்கியத்துவத்தை, ‘ஒரு குடும்பத்தைக் கலையாம பார்த்துக்குறதுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு’ என ஒரே வசனத்தில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிய விதம் அருமை.
குடும்பத்தோடு சென்று பார்க்கும்போது, ‘தம்பி’யின் மகத்துவத்தை உணரலாம்.