மஹா
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழா தமிழா’ - விவாத (டாக் ஷோ) நிகழ்ச்சியின் முதலாண்டு நிறைவு விழாவை சேனல் தரப்பு சமீபத்தில் வெற்றி விழாவாக கொண்டாடியது. திரைப்பட இயக் குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி யின் ஓராண்டு கால அனுபவம் குறித்து அவரிடம் பேசியதில் இருந்து..
விஜய் டிவியின் ‘நீயா நானா’வுக்கு போட்டி யாக தொடங்கப்பட்டதுதானே இந்த நிகழ்ச்சி?
மிகப் பெரிய அளவில் பேசப்படும் நிகழ்ச்சி அது. ரஜினிகாந்த் மாதிரி ஓர் உயரத் தில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது அதே சாயலில் மற்றொரு நிகழ்ச்சி என இறங் கும்போது நளினிகாந்த் ஆகிவிடக்கூடாது. நிச்சயம் விஜயகாந்த் அளவுக்கு ஓர் இடத்தை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு குதித் தோம். கடந்த ஓர் ஆண்டில் முதன்மை டாக் ஷோவாக பெயர் எடுத்து வருகிறோம். இது மிகப் பெரிய வெற்றிதானே!
இந்த நிகழ்ச்சியின் பலம்தான் என்ன?
மக்களை, அவர்கள் பேசத் தயங்கும் விஷயத்தை பேச வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் தனித்த வெற்றியாக நினைத் தோம். அதை சரியாக செய்து காட்டி வருகிறோம். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எதையும் மேம்போக்காக பேசாமல், ‘நான் என்ன நினைக்கிறேன், எனக்கு என்ன நடந்தது’ என்பதை விவாதிக்கின்றனர். வலியோ, அவமானமோ, புகழோ, இன்பமோ அது அவர்கள், பார்த்ததாக இருக்க வேண்டும். பொதுவாக என்ன நடந்தது என்பது இங்கே தேவை இல்லை. உனக்கு என்ன நடந்தது என்பதுதான் நிகழ்ச்சியின் பிரதானம். பலமும்கூட.
ஒரு திரைப்பட இயக்குநராக உங்கள் ஆலோசனைகளும் நிகழ்ச்சிக்கு இருக்குமே?
இல்லை. இந்த நிகழ்ச்சியை பிரவீன் என்ற நண்பர் இயக்குகிறார். அவருடன் இணைந்து பணியாற்ற 30 பேர் குழு உள்ளது. நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் தமிழ் தாசன் மேற்பார்வையில் இக்குழுவினர் முடிவு செய்வதுதான் விவாதத்தின் மையப்பொருள். படப்பிடிப்பு அரங்குக்கு செல்வதும், அங்கு 60 பேர் கொண்ட விவாத குழுவை சந்தித்து உரையாடுவதும்தான் என் வேலை.
நிகழ்ச்சியில் நடப்பு பிரச்சினைகள் பற்றி அதிகம் விவாதிக்கப்படுவதில்லையே?
அதுக்காகத்தான் நாளிதழ்கள், செய்திச் சேனல்கள் உள்ளனவே. தினசரி அரசியல் பற்றி பேச மாட்டோம். தினசரி உபயோகத்துக்கு உள்ளாகும் உணவு, உடை, பண்பாடு இருக்கிறதே அது குறித்த ஓர் அரசியல் பார்வை இருக்குமே, அதைப்பற்றி பேசுவோம்.
இந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்க்கைக்கு ஏதாவது புத்திமதி அளித்திருக்கிறதா?
நிச்சயமாக. ஒரு விஷயத்தைப் பற்றி நமக்கென்று ஒரு கருத்து இருக்கும். நம்மைச் சார்ந்த நண்பர்கள், உறவுகளோடு அதை பரிமாறி மகிழ்வோம். அது நமது கருத்தை ஒட்டியதாகவே இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சி வழியே மாற்றுக் கருத்து கொண்ட பலரை சந்திக்க முடிகிறது. அவர்கள் கருத்துகளோடு உரசும்போது அதில் ஒரு தெளிவு பிறக்கிறது. ஒரு புதிய விஷயத்தை அறிய முடிகிறது. அறியா மையை அறிந்துகொள்வது ஒரு மகிழ்ச்சி.
நீங்கள் முதல் கட்ட படப்பிடிப்பு வரை சென்ற ‘புகழேந்தி எனும் நான்’ படம் என்ன ஆனது?
அதில் முக்கிய கதாபாத்திரத்தில், மறைந்த இயக்குநர் மகேந்திரன் நடித்திருந் தார். அவர் இப்போது இல்லை. நடந்து முடிந்த 25 நாட்கள் படப்பிடிப்பில் 20 நாட்கள் அவரை வைத்து நடத்தியுள்ளேன். இனி அந்தப் பகுதிகளையெல்லாம் திரும்ப நடத்த வேண்டும். அது இப்போது முடியாது. என் அடுத்த பட வேலையை ஜனவரி, பிப்ரவரி யில் தொடங்க உள்ளேன். இதுதவிர ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ உள்ளிட்ட 2 படங்களில் நடிக்கிறேன்.
ஏன் திடீரென கெட்-அப் மாற்றம்?
ஒரே தோற்றத்தில் ரொம்ப நாட்களாக சுற்றி வருகிறோமே என தோன்றியது. அவ்வளவுதான். தலைமுடி ஒன்றைத்தானே சுலபமாக இழக்க முடியும். மீண்டும் 2 மாதங்களில் பழைய தோற்றத்துக்குள் நுழைய முடியும். இதுவும் ஒரு காரணம்!