'அழியாத கோலங்கள் 2' படக்குழுவினரைப் பாராட்டி இயக்குநர் கே.பாக்யராஜ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ரேவதி, ஈஸ்வரி ராவ், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அழியாத கோலங்கள் 2'. அரவிந்த் சித்தார்த்தா இசையமைப்பாளராகப் பணிபுரிந்த இந்தப் படத்துக்கு ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈஸ்வரி ராவ் மற்றும் தேவ சின்ஹா தயாரித்த இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்தப் படத்தைப் பாராட்டி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் இயக்குநர் கே.பாக்யராஜ்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''மரியாதைக்குரிய 'அழியாத கோலங்கள் 2' படம் இயக்குநர் எம்.ஆர். பாரதி மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் நாயர், இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த், எடிட்டர் மு.காசி விஸ்வநாதன் உள்பட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் உங்கள் பாக்யராஜின் பணிவான வணக்கமும் வாழ்த்துகளும்.
திரைப்படம் பார்த்து என் கண்கள் கசிந்து, நீண்ட நாட்கள் ஆகியிருந்தன. உங்கள் படத்தில் ரேவதியும், அர்ச்சனாவும் பேசும் காட்சியில் அடக்க முடியாமல் அழுதேன். அவ்வளவு இயல்பான காட்சி அமைப்பு, வசனம், அதற்கு உயிர் ஊட்டிய நடிகையர்.
திரைப்படம் உணர்வுபூர்வமாக இருப்பது மிக மிக அவசியம். அதுவே நிலையான வெற்றியைத் தரும் என்பதே நான் என் உதவியாளர்களுக்குக் கூறும் முதல் பாடமாகும். மனதைத் தொடும் அந்த உணர்வு உங்கள் படம் முழுக்க இழையோடியது. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா உறவை அவ்வளவு கண்ணியப்படுத்தியிருந்தீர்கள். உரையாடலின் போது இருவருமே பாத்திரங்களோடு ஒன்றிப்போய் உயிர் ஊட்டியிருந்தார்கள்.
பெருமைப்பட்டே, பொறாமையாகவும் இருந்தது. இப்படி ஒரு பதிவை நான் மிஸ் செய்துவிட்டேனே என்று. கதாசிரியருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நினைத்து நினைத்துப் பெருமைப்படும் நெகிழ்வான உங்களது படைப்பு காலம் கடந்தும் பேசிக் கொண்டிருக்கும் படம். பார்க்க இனிய வாய்ப்பு வழங்கிய ரேவதிக்கு எனது ஸ்பெஷல் நன்றி. மீண்டும் ஒரு முறை ஒட்டுமொத்தக் குழுவையும் ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்துகிறேன். நன்றி''.
இவ்வாறு கே.பாக்யராஜ் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.