வெற்றி - தோல்வி தன்னை அதிகம் பாதிப்பதில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்துள்ளார்.
நாளை (டிசம்பர் 20) வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில், வெற்றி - தோல்வி தன்னைப் பாதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் கூறுகையில், "'நம்ம வீட்டுப் பிள்ளை' மீண்டும் என்னை சரியான பாதையில் திருப்பியிருக்கிறது. வெற்றி - தோல்வி என இரண்டுமே என்னை அதிகம் பாதிப்பதில்லை.
'மிஸ்டர் லோக்கல்' தோல்வி என்று அறிவிக்கப்பட்டபோது நான் வருத்தப்படவில்லை. 'நம்ம வீட்டுப் பிள்ளை' படப்பிடிப்பில் கலகலப்பாக இருந்தேன். படப்பிடிப்பில் கவனம் செலுத்தினேன். அதே போல 'நம்ம வீட்டுப் பிள்ளை' நல்ல வசூல், நல்ல விமர்சனங்கள் என்று சொன்னபோது நான் விழா வைத்து வெற்றியைக் கொண்டாடவில்லை.
'ஹீரோ' படத்தின் இடைவிடாத படப்பிடிப்பால் நான் படத்தைத் திரையரங்கில் கூட பார்க்க முடியவில்லை.
'ஹீரோ'வும், தொடர்ந்து வரும் எனது அனைத்துப் படங்களும் எனது இந்த வேகத்தைத் தக்கவைக்கும். எனது திரை வாழ்க்கையில் எடுக்கப்பட்ட படங்களில் அதிக பொருட்செலவு இருக்கும் படம் என்று 'ஹீரோ'வைச் சொல்ல மாட்டேன். ஆனால், திரையில் அந்த பிரம்மாண்டம் தெரியும். எனது தொழில்நுட்பக் குழுவுக்கு நன்றி. முக்கியமாக ஜார்ஜ் சி வில்லியம்ஸுக்கு" என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.