அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்துக்கு 'ஜிந்தாபாத்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சினம்'. காவல்துறை அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள இந்தப் படத்தில் பல்லக் லால்வாணி நாயகியாக நடித்துள்ளார். ஷபீர் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு, கோபிநாத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தப் படத்துக்கு 'ஜிந்தாபாத்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. ஆன் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜ் மற்றும் எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.