ஷங்கர் இயக்கத்தில் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்துள்ளார்.
நாளை (டிசம்பர் 20) 'ஹீரோ' வெளியாகவுள்ள உள்ள நிலையில் இதுகுறித்து சிவகார்த்துகேயன் பேசும்போது, "’ஜென்டில்மேன்’ பாணியில் இந்தப் படம் இருக்கும். இப்படியொரு சூழலை, ஐடியாவை உருவாக்கிக் கொடுத்த அத்தனை இயக்குநர்களுக்கும் பெரிய நன்றி. ஷங்கர் சாரை எல்லாம் இந்த இடத்தில் சொல்ல வேண்டும். அவர் போட்ட விதையால் தான் நாம் வேறு வேறு ஐடியாக்கள் பண்ண முடிகிறது. அப்படி ஒன்று பண்ணியிருக்கோம்" என்றார்.
"ஷங்கர் இயக்கத்தில் எப்போது நடிப்பீர்கள்" என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில் அளிக்கையில், "கண்டிப்பாக எல்லா நாயகர்களுக்கும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க கனவு இருக்கும். ஆனால் ஒரு நடிகனாக அப்படி ஒரு பெரிய இயக்குநருடன் நடிக்க எனது சந்தையை நான் விரிவாக்க வேண்டும். எனது திறமைகளைத் தீட்ட வேண்டும். 'ஹீரோ'வும், அடுத்து வரும் எனது அனைத்துப் படங்களும் அவர் போன்ற ஆசான்களுடன் பணிபுரிய எனக்கு உதவும்" என்றார்.