தமிழ் சினிமா

பாடல் படப்பிடிப்புடன் தொடங்கியது தலைவர் 168

செய்திப்பிரிவு

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.

மும்பையில் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, அங்கிருந்து நேராக ஹைதராபாத்துக்குச் சென்றார் ரஜினி. அங்கு சிவா இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 18) முதல் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

முதற்கட்டப் படப்பிடிப்பில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள். இதனை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக "எளிமையின் அடையாளமான ரஜினிகாந்த் சாரை சந்தித்தேன். முதல் நாள் படப்பிடிப்பு பாடல் கட்சியுடன் தொடங்கியது.

பாடல் குறித்த அவருடைய நேர்மறை வார்த்தைகள் ஊக்கமளிக்கிறது. அவரிடமிருந்து பரவும் சக்தியும் அவர் இந்த உலகத்தில் பரப்பும் சக்தியும் அபாரம். கடவுளுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் இமான்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தலைவர் 168' என அழைத்து வருகிறது படக்குழு. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளார்.

          
SCROLL FOR NEXT