கார்த்திக் சுப்புராஜ் படத்துக்காக, 'பேட்ட' பாணியில் உள்ள தனுஷின் லுக் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
'அசுரன்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். லண்டன் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியக் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
மதுரையில் சில முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்பு தற்சமயம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தக் காட்சிகளுக்காக 'பேட்ட' படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் ரஜினியைப் போலவே மீசையை வைத்துள்ளார் தனுஷ். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த லுக்கிற்கு தனுஷ் ரசிகர்களிடையே மட்டுமன்றி, ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனென்றால், 'பேட்ட' படத்தை இயக்கியவரும் கார்த்திக் சுப்புராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் படத்தின் தலைப்பு 'சுருளி' எனப் பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கும் படக்குழு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், அஸ்வந்த் உள்ளிட்ட பலர் தனுஷுடன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.