மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தில், படகு ஓட்டும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரையும் ஒப்பந்தம் செய்து 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தொடங்கிவிட்டார் மணிரத்னம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரை வைத்து தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்கள்.
லைகா நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தில் படகு ஓட்டும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இதற்காக பிரத்யேகமாகப் படகு ஓட்டவும் கற்றுக்கொண்டு வருகிறார். படகு ஓட்டுபவர் என்றால் 'பொன்னியின் செல்வன்' கதைப்படி பூங்குழலி கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவுள்ளது தெளிவாகியுள்ளது.
ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் விக்ரம், விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன் , இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.