சிலரது பேச்சு மன உளைச்சலைக் கொடுத்தது என்று 'காளிதாஸ்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் பரத் வேதனையுடன் தெரிவித்தார்.
புதுமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், ஆன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காளிதாஸ்'. டிசம்பர் 13-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பரத் பேசியதாவது:
"வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்ப நாளாகிவிட்டது. மும்பையில் படப்பிடிப்பில் இருக்கும்போது 'காளிதாஸ்' சக்சஸ் மீட் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கும் சில படங்கள் தவறியுள்ளன. அது எல்லா நாயகர்களுக்கும் வரும்தான். ஆனால், என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்ல படம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது.
சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்ல படங்கள் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ரொம்ப முக்கியம். 2017- ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சினிமாவில் நிறைய பேர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டார்கள். நிறைய பேர் படம் நல்லாருக்கு. ஆனால் இவர் நடித்துள்ளார். இவருக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அது நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால், இந்தப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ரொம்பவே கொண்டாடினார்கள். ஒரு தவறான விமர்சனம் கூட இல்லை. அதற்கு மிகப்பெரிய நன்றி.
இப்போது ஒரு நல்ல படம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியிட வேண்டும், அதற்கு திரையரங்குகளை எப்படி புக் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாகச் செய்தார். எல்லாருமே இந்தப் படத்தைப் பெரிதாக்க வேண்டும் என்று மொத்தமாக உழைத்தோம்.
அடுத்த வாரமும் இந்தப் படத்தை நாங்கள் கொண்டு போக வேண்டும். ஏனென்றால், அடுத்த வாரம் ’ஹீரோ’, ’தம்பி’, ’தபங் 3’ ஆகிய படங்கள் வெளிவருகின்றன. அதோடு நாங்கள் நிற்க வேண்டும். இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்திருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார். தமிழ் சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் பட்டியலில் அவர் இருப்பார். ரொம்ப வருடம் கழித்து எனக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது".
இவ்வாறு பரத் தெரிவித்தார்.