முதலில் சூரி, பின்பு சூர்யா, அடுத்து விஜய் ஆகியோரது படங்களை இயக்க இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஷாரூக் கான், ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்கள் அனைவருமே வெற்றிமாறனை அழைத்துப் பேசினார்கள்.
ஆனால், 'அசுரன்' படம் வெளியாகும் முன்பே சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் வெற்றிமாறன். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார். இதனால், சூரி படத்தை முதலில் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் ரஜினி, விஜய் சந்திப்பால் சூரி படம் தள்ளிப் போகவும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதனிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்யை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை துரிதமாக நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வெற்றிமாறன் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே பண்ணலாம் என்று விஜய் தெரிவித்துள்ளார். இதனால், சூரி படத்துக்குப் பிறகு விஜய் படம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணி உறுதியாகியுள்ளது. 'அசுரன்' படத்தைத் தயாரித்த தாணுவிடம், சூர்யாவின் கால்ஷீட் இருந்தது. அப்போது வெற்றிமாறன் - சூர்யா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, 'அசுரன்' வெளியீட்டுச் சமயத்தில் நடைபெற்றது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்துக்கு நகராமல் இருந்தது.
தற்போது, தாணு - வெற்றிமாறன் - சூர்யா கூட்டணி உறுதியாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு இருவருக்குமே அட்வான்ஸ் கொடுத்து கூட்டணியை உறுதி செய்துவிட்டார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சூரி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் வெற்றிமாறன். அந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
சூர்யா கூட்டணி உறுதியானாலும், விஜய்க்கு சொல்லப்பட்ட கதை வேறொரு கதையாம். ஆகையால், முதலில் சூரி படத்தை முடித்துவிட்டு, சூர்யா படத்தைத் தொடங்குகிறார் வெற்றிமாறன். அதனை முடித்துவிட்டு, விஜய் படத்தைத் தொடங்கவுள்ளார். இதில் விஜய் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.