நான் வளரவில்லை; இப்போதும் இயக்குநரின் நடிகனாகவே இருக்கிறேன் என்று மும்பையில் நடந்த 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, பிரதீக் பார்பர், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 16) மாலை இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. அப்போது மும்பையில் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ரஜினி, சுனில் ஷெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், பிரதீக் பார்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் ரஜினி.
உங்களுக்கு எங்கிருந்து இப்படி நடிப்பதற்கு, ஆடுவதற்கான ஆற்றல், உந்துதல் கிடைக்கிறது?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பணம் தான். எனக்குக் கொடுக்கப்படும் சம்பளத்துக்கான நியாயத்தை நான் தர வேண்டும். (சிரிப்பு) உண்மையில் நடிப்பு எனது பேரார்வம். எனக்கு நடிப்பது, கேமராவுக்கு முன் இருப்பது, வெளிச்சத்தில் இருப்பது பிடிக்கும். அதுதான் எனக்கு ஆற்றலைத் தருகிறது.
ஒரு நடிகராக எந்த அளவுக்கு வளர்ந்துள்ளதாக நினைக்கிறீர்கள்?
வெளிப்படையாகச் சொன்னால் நான் வளரவில்லை என்றே நினைக்கிறேன். ஆரம்பத்தில் சற்று கூச்சமாக, பதட்டமாக இருந்தேன். நடிக்க நடிக்கத் தன்னம்பிக்கை வந்து, அது மாறியிருக்கிறது. மற்றபடி நான் இயக்குநரின் நடிகன். எனவே எல்லாம் இயக்குநரைச் சார்ந்துதான் இருக்கிறது. நடிப்பது என்பது கொடுக்கப்படும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெளிப்படுவதுதான். மக்களுக்கு எப்படியோ ஒரு குறிப்பிட்ட நடிகரைப் பிடித்துவிடுகிறது. அவ்வளவே. இதைத் தாண்டி நான் நடிப்பில் பெரிதாக மாறிவிட்டதாக நினைக்கவில்லை. அன்றும் இன்றும் அதே ரஜினிகாந்த்தான்.
இவ்வாறு ரஜினி பதிலளித்தார்.