அரசியலில் ஈடுபட வேண்டாம் என நடிகர் அமிதாப் பச்சன் எனக்கு அறிவுரை கூறினார், ஆனால் அதனை என்னால் கடைபிடிக்க முடியவில்லை என தர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 16-ம் தேதி மாலை 6:30 மணியளவில் வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 16) மாலை 6 மணியிலிருந்தே 'தர்பார்' ட்ரெய்லர் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகவலைதளத்தில் உண்டானது.
ஆனால், மும்பையில் 'தர்பார்' படத்தின் இந்தி ட்ரெய்லர் விழா தொடங்க தாமதமானது. இதனால் இணையத்தில் 6:30 மணியளவில் ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு ஆளானது லைகா நிறுவனம்.
மாலை 7 மணியளவில் தான் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:
60 வயதில் மூன்று முக்கிய விஷயங்களை கடை பிடிக்க வேண்டும் என நடிகர் அமிதாப் பச்சன் எனக்கு அறிவுரை கூறினார். எப்போதும் சுறுசுறுப்புடன் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது எனக் கூறினார். ஆனால் முதல் இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் செய்ய முடிந்தது. 3-வது விஷயத்தை என்னால் செய்ய முடியவில்லை’’ என பேசினார்.