'96' பாடல்கள் எப்படி உருவானது என்பதன் பின்னணியைப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் கோவிந்த் வசந்தா
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 7 ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டது. கோவிந் வசந்தா இசையமைத்த இந்தப் படத்துக்கும், இதில் இடம்பெற்ற பாடல்களுக்கும் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
'காதலே காதலே' என்ற பாடல் இப்போது வரை, கல்லூரி இளைஞர்களின் ரிங்-டோனாக இருந்து வருகிறது. '96' பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ்ப் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் கோவிந்த் வசந்தா.
தற்போது '96' பாடல்கள் ஒவ்வொன்றும் உருவாக்க எவ்வளவு நேரமெடுத்தது என்பதை 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார் கோவிந்த் வசந்தா. இது தொடர்பாக, "'96' படத்தின் தீம் பாடல் உடனடியாக வந்த யோசனை. அதை முதலில் பின்னணி இசையாக வைக்கவில்லை. கூடுதல் பாடலாகத்தான் 'காதலே காதலே' பாடலை இசையமைத்திருந்தேன்.
15-20 நிமிடங்களில் அதன் இசையமைப்பு முடிந்துவிட்டது. அது ஒரு வயலின் பாடலாக இருக்க வேண்டியது. பின் அதில் 'காதலே காதேல்' மெட்டைச் சேர்த்தேன். படத்தொகுப்பு முடிந்து அதைப் படத்தை வைக்கும்போது, அதற்காகத் தனியாக நாங்கள் எந்த காட்சியும் எடுத்து வைக்கவில்லை. அது தானாகவே பொருத்தமாகிப் போனது ஒரு மாயம் தான்.
அதே போல 'லைஃப் ஆஃப் ராம்' பாடல் 10 நிமிடங்களில் முடிந்தது. ஆனால் 'அந்தாதி' பாடலை முடிக்க எனக்கு 5லிருந்து 6,மாதங்கள் வரை ஆனது. அதுதான் எங்கள் முதல் பாடலாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் எனக்கு அதற்கான யோசனை வர நீண்ட நாட்கள் ஆனது" என்று தெரிவித்துள்ளார் கோவிந்த் வசந்தா