சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படத்தில் புதிதாக ஒரு பாடலை இணைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த விழாவில், "நான் சமீபமாக இசையமைத்த படங்களில் முழுமையான திருப்தி கிடைத்த படம்" என்று 'ஹீரோ' படத்தை யுவன் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், தற்போது புதிதாகப் பாடலொன்றைப் படத்தில் இணைத்துள்ளார் யுவன். இந்தப் பாடலை பா.விஜய் எழுத, இளையராஜா பாடியிருக்கிறார். இந்தப் பாடல் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது வெளியிடப்படவில்லை.
இந்தப் பாடல் குறித்து யுவன் தனது ட்விட்டர் பதிவில், "’ஹீரோ’ படத்தில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. அப்பா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை அப்பாவைப் பாட வைத்துப் பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.
'ஹீரோ' படத்தின் பணிகளை முடித்துவிட்டதால், தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.