தமிழ் சினிமா

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சமந்தா?

செய்திப்பிரிவு

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சமந்தாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'மாயா', 'இறவாக்காலம்' மற்றும் 'கேம் ஓவர்' ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இதில் 'இறவாக்காலம்' மட்டும் பைனான்ஸ் பிரச்சினையால் வெளியிட முடியாமல் இருக்கிறது. இவரது இயக்கத்தில் வெளியான 'கேம் ஓவர்' திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் டாப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

'கேம் ஓவர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் அஸ்வின் சரவணன். தற்போது அந்தக் கதையில் நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் புதிய படத்தில் சமந்தாவுடன் நடிக்கவுள்ளவர்கள் முடிவானவுடன், முறையாக அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், சமந்தா நடிக்கவுள்ளதால் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ’சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு சமந்தா நடிக்கவுள்ள தமிழ்ப் படம் இது என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT