விஜய் - வெற்றிமாறன் சந்திப்பில் நடந்தது என்ன, இருவரும் படம் பண்ணுவார்களா என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் வெற்றிமாறன், பேரரசு, மகிழ் திருமேனி உள்ளிட்ட பல இயக்குநர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. ஆனால், சமீபத்தில் விஜய் - வெற்றிமாறன் சந்திப்பு நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்று பலரும் செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக விசாரித்த போது, விஜய் - வெற்றிமாறன் இருவரும் படம் பண்ணுவது தொடர்பாகச் சந்தித்துப் பேசியதை உறுதிப்படுத்தினார்கள். கிட்டதட்ட இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டது.
மேலும், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். அந்தப் படம் முதலில் தொடங்கலாமா, விஜய் படம் தொடங்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார் வெற்றிமாறன். எந்தப் படம் முதலில் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து இன்னும் 10 நாட்களில் உறுதியான தகவல் வெளியாகக்கூடும்.
விஜய் படம் - சூரி படம் இரண்டுக்குமே கதையைத் தயார் செய்துவிட்டார். விஜய்யுடனான கூட்டணி தயாரிப்பு தரப்பிலிருந்து கூறட்டும் என்பதாலே அமைதியாக இருக்கிறார் வெற்றிமாறன். லோகேஷ் கனகராஜ் படம் எப்போது முடிவடையும், எப்போது விஜய் தேதிகள் கொடுக்கிறார் என்பதைப் பொறுத்தே சூரி படத்தைத் தொடங்கி முடித்துவிடலாமா என்பதெல்லாம் வெற்றிமாறன் முடிவு செய்யவுள்ளார். நெட்ப்ளிக்ஸுக்காக உருவாகும் வெப் சீரிஸில் தனது காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டார் வெற்றிமாறன் என்பதையும் குறிப்பிட்டார்கள்.