காவல் ஆய்வாளர் காளி தாஸ் (பரத்). அவரது மனைவி வித்யா (ஆன் ஷீத்தல்) நல்ல ரசனையும், ஓவியத் தில் ஈடுபாடும் கொண்டவர். காத லித்து திருமணம் செய்த கணவன், தன்னை கண்டுகொள்ளாமல் கடமையே கண்ணாக இருப்பதால் கோபம் கொள்கிறார் மனைவி. இந்த சூழலில், அப்பகுதியில் அடுத்தடுத்து 2 மர்ம மரணங்கள் நடக் கின்றன. அதுபற்றி விசாரிக்கும் காளிதாஸ், அவை தற்கொலைகள் என்று கருதுகிறார். ஆனால், அவை கொலையாகவும் இருக்கலாம் என்கிறார் துணை ஆணையர் ஜார்ஜ் (சுரேஷ் மேனன்). இந்த குழப்பத் துக்கு மத்தியில் மர்ம மரணங்கள் மீண்டும் தொடர்கின்றன. அவை கொலையா, தற்கொலையா? அதற் கான காரணத்தை அவர்களால் கண்டறிய முடிந்ததா? காளிதாஸின் குடும்ப சிக்கல் தீர்ந்ததா? இந்த கேள்விகளுக்கு விடைகளாக விரிகிறது திரைக்கதை.
தொடர் துர்மரணங்களை புலன் விசாரணை செய்யும் திரில்லர் வகை படங்கள் தமிழுக்கு புதிது அல்ல. ஆனால், மரணங்களுக்கான காரணத்தை இறுதிவரை மோப்பம் பிடிக்கமுடியாதபடி இயன்ற அளவு தொய்வின்றி நகரும் திரைக்கதை யால், இப்படம் கம்பீரமாக தனித்து நிற்கிறது. ஊகிக்க வாய்ப்பே வழங் காத படத்தின் முடிவு, வலுவான தாக, நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். அதில் இயக்குநர் கொஞ்சம் சறுக்குகிறார். பல படங் களில் கிளைமாக்ஸில் கூறப்படும் காரணம் திடீரென அந்தரத்தில் இருந்து குதித்தது போலவோ, திணிக்கப்பட்டதாகவோ நம்பகத் தன்மையின்றி இருக்கும். அந்த தவறு இப்படத்தில் நிகழவில்லை. மரணங்களுக்கான காரணம், படத்தின் தொடக்கத்தில் இருந்தே அலசப்படும் ஒரு பிரச்சினையுடன் நேரடி தொடர்பு உடையதாகவே இருக்கிறது.
இன்றைய அவசர யுகத்தில் நேரமின்மையால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் திருமண உறவுகள், குடும்பத்துக்கு போதிய நேரம் ஒதுக்காமை எனும் முக்கிய சமூகப் பிரச்சினையை அழுத்தமான காட்சிகள் வழியே பேசி, அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில்.
திருமண உறவுக்கு அப்பாற்பட்ட உறவுகள் பற்றி பேசும்போது, அதில் சம்பந்தப்பட்டவர் பெண் என்றால் அவர்களை இழிவுபடுத்துவது இங்கு புரையோடிக் கிடக்கும் பொதுபுத்தி. அவ்வாறு ஒருதலை பட்சமாக தீர்ப்பு எழுதாமல் வெளிப் பார்வையாளர்போல அந்த விஷ யத்தை பொறுப்புடன் கையாண்டது சிறப்பு.
படம் நெடுகிலும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. கணவன் - மனைவி உறவு சார்ந்த சிக்கல்கள், பிறழ் உறவுகள் தொடர்பான சில நகைச்சுவைகள் ‘அடல்ஸ் ஒன்லி’ வகையை சேர்ந்தவை. அவை ஆபா சமாக இல்லை என்பதுடன், திரில்லர் படத்தில் துருத்தித் தெரியாத கலகலப்பைத் தருகின்றன.
கதாநாயகி உட்பட 3 முதன்மை கதாபாத்திரங்கள் மீது எழுந்து நிற்கும் திரைக்கதையில், அந்த மூன்றுமே பேசப்படும் பிரச்சினை யோடு அழுத்தமான தொடர்பு கொண்டவையாக இருப்பது, இப் படத்தை ‘சமூக அக்கறை’ கொண்ட திரில்லராக தரம் உயர்த்துகிறது.
ஜார்ஜ் கதாபாத்திரம் வழக்க மான காவல் அதிகாரி கதாபாத் திரமாக அல்லாமல், பணி வாழ்க்கை யின் நீண்ட அனுபவம், பக்குவம் ஆகியவற்றுடன் படைக்கப்பட்டுள் ளது. காளிதாஸ் தன் மனைவியிடம் எரிந்துவிழும்போது, ‘‘வேலை கொடுத்தவன்கிட்ட பம்முற, வாழ்க் கைய கொடுத்தவகிட்ட எரிஞ்சு விழுற’’ என்று கூறுவதாகட்டும்.. இறந்துபோன பெண்களின் நடத்தை குறித்த மோசமான கருத்தை காளிதாஸ் பேசும்போது, ‘‘போலீஸ் எப்ப மாரல் போலீஸ் ஆனீங்க?’’ என்று கேட்பதாகட்டும்.. ஜார்ஜிடம் இருந்து வெளிப்படும் வசனங்கள், இப்பிரச்சினையை கையாண்டதில் இயக்குநருக்கு இருக்கும் முதிர்ச்சியை காட்டுகி றது. ஜார்ஜ் ஆக நடித்துள்ள சுரேஷ் மேனனுக்கு சிறந்த மறுவரவு.
‘‘நாமெல்லாம் இங்கே என்ன பெஞ்சு தேய்க்கவா உக்காந்திருக் கோம்?’’ என்று கடிந்துகொண்டு, ஜார்ஜுடன் இணைந்து சுழலும் காவல் அதிகாரி காளிதாஸ் கதா பாத்திரத்தில் பரத் கச்சிதம். கூடுதல் பணிநேரத்தையும் தவிர்க்க முடியா மல், மனைவியின் துயரையும் போக்க இயலாமல் தவிக்கும் தவிப்பை மிகையின்றி வெளிப்படுத் துகிறார்.
ஆன் ஷீத்தல் அழகாக இருக் கிறார். ஆசை ஆசையாக குழந் தையை கொஞ்சுவது, மேல் மாடி யில் குடியிருக்கும் ஆதவ் கண்ண தாசனுடன் நேரத்தை செலவழிப் பது, கணவன் மீது உரிமையுடன் கோபம் கொள்வது என எல்லா காட்சிகளிலும் கவர்கிறார்.
திரில்லர் படத்துக்கான அமா னுஷ்ய தன்மையுடன் ஒளிப்பதிவை தந்திருக்கிறார் சுரேஷ் பாலா. பறவைக் கோணங்களில் வரும் பல காட்சிகள் அழகு. திரில்லர் படத்தில் பாரதியின் பாடல்களைப் பயன்படுத்தியது ஆச்சரியகரமாக எடுபடுகிறது. பின்னணி இசை பெரிய அளவில் உறுத்தல் இல்லை.
ஆன் ஷீத்தல் - ஆதவ் காட்சி களுக்கு அதிக நேரம் அளித்திருப் பது, பரபரப்பாக நகரும் கதைக்கு வேகத்தடையாக அமைகிறது.
உளவியல்ரீதியாக பாதிக்கப் பட்டவர்களை தனிமையில் விடமாட்டார்கள் என்ற நியதிக்கு மாறான திரைக்கதை, துருத்தி நிற்கும் பெருங்குறை. இதுபோன்ற தவறுகளை கடந்து, அவசியமான சமூகப் பிரச்சினையை, அழகான, முழுமையான கதாபாத்திரங்கள் வழியே அசத்தலான திரில்லர் திரைக்கதைக்குள் பொருத்திய காளிதாஸுக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்!