தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு ’விஸ்வாசம்’; சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ’ஹீரோ’: தயாரிப்பாளர் ராஜேஷ்

செய்திப்பிரிவு

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம்; சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹீரோ என்று 'ஹீரோ' இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜேஷ் பேசினார்.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் தயாரிப்பாளர் ராஜேஷ், "இந்தப் படம் இன்னொருத்தருடைய கனவு. அதை நான் நிறைவேற்றியுள்ளேன். படம் எப்படியிருக்கும் என்று அனைவருமே பேசிவிட்டார்கள். இந்தப் படம் எடுக்கும் போது அபய் தியோல் தான் வில்லன் என நினைத்தேன்.

ஆனால், படம் எடுத்து முடித்தவுடன் தான் ஊரெல்லாம் வில்லன்கள் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். இந்தப் படம் வெளியானவுடன் ஹீரோ மட்டும் ஜெயிக்க மாட்டார். ஒட்டுமொத்தமாக ஜெயிப்பார். அதற்கு நான் கியாரண்டி.

அஜித் ரசிகர்களுக்கு எப்படி 'விஸ்வாசம்' கொடுத்தேனோ, அதே மாதிரி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்தப் படம் இருக்கும். சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் ஒரு ப்ரேக். இன்றைக்கே நான் படத்தின் வசூலைத் தைரியமாகச் சொல்வேன். ஆனால், கிண்டல் பண்ணுவீர்கள். படம் வெளியான 10 நாட்கள் கழித்துப் பேசுகிறேன். ஷங்கர் சார் படங்களை ரொம்பவே ரசிப்பேன். அதற்குப் பிறகு மித்ரன் தான்" என்று பேசினார் தயாரிப்பாளர் ராஜேஷ்.

SCROLL FOR NEXT