நம்ம சமுதாயத்துக்கே ஒரு ஹீரோ தேவை என்று 'ஹீரோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யுவன் பேசினார்.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் பேசும் போது, “ஹைதராபாத் பெண் டாக்டர் விவகாரத்தைப் பார்க்கும் போது ஒரு எதிர்ப்பு உணர்வு வருகிறது. நம்ம சமுதாயத்துக்கே ஒரு ஹீரோ தேவை என நினைக்கிறேன். அதை இந்தப் படம் சரியாக எடுத்துரைக்கும் என்பது என் நம்பிக்கை.
நிறையப் படங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளேன். ஆனால், முதல் முறையாக 18 நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாக ஒரு காட்சிக்குப் பின்னணி இசையமைத்துள்ளேன். இது தான் நீளமான பின்னணி இசையாக இருக்கும். இந்தியாவில் இதற்கு முன்பு செய்திருக்கிறார்களா என்பது தெரியாது. அதற்கு வாய்ப்பு கொடுத்தது மித்ரன் தான். நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தின் பின்னணி இசை ரொம்பவே திருப்தியளித்தது. 'அவெஞ்சர்சஸ்' படம் மாதிரி கண்டிப்பாக 'ஹீரோ' படமும் Franchise ஆகும் என நம்புகிறேன்” என்று பேசினார் யுவன்.