கமல் தொடர்பாகப் பேசியதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்று லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிசம்பர் 7-ம் தேதி 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் பேசும் போது, "ரஜினி படத்துக்காக போஸ்டர் ஒட்டும்போது சண்டை போட்டுள்ளேன். இங்கு சொல்வதில் தவறில்லை. கமல் சாருடைய போஸ்டர் ஒட்டப்படும்போது அதில் சாணி அடிப்பேன். அப்போதைய மனநிலை அப்படியிருந்தது. இப்போது இருவரும் கைப்பிடித்து நடக்கும் போதுதான், வேறு ஏதோ நடக்கப் போகிறது எனத் தோன்றுகிறது" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியது. இதற்கு உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் லாரன்ஸ் விளக்கம் ளித்தார். ஆனால், தொடர்ச்சியாக கமல் ரசிகர்கள் மத்தியில் லாரன்ஸின் பேச்சு கோபத்தை உண்டாக்கியது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, நேற்று (டிசம்பர் 12) சென்னையில் நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் விழாவில் லாரன்ஸின் பேச்சு அமைந்தது. இதில் லாரன்ஸ் பேசும்போது, "'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் நான் பேச வேண்டும் என நினைத்தது வேறொரு ஆளை. என்னுடைய வலியைச் சொல்ல நினைத்தது வேறு. ஆனால், சம்பந்தமில்லாமல் ஒரு சின்ன தவறு நடந்துவிட்டது.
அண்ணன் கமல் சாரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருந்தேன். அதை இப்போது தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். நான் சின்ன வயதில் தெரியாமல், புரியாமல் கமல் சாருடைய போஸ்டரில் சாணி அடித்திருக்கிறேன். அது புரியாத வயது. இப்போது ரஜினி சார் - கமல் சார் ஒன்றாக கை கோத்துப் போவதைப் பார்க்கும்போது தவறாகப் பண்ணிவிட்டோமோ எனத் தோன்றுகிறது.
கமல் சாருக்கும் எனக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம் கூட வந்ததில்லை. மனதளவில் கூட அவருக்குத் துரோகம் நினைக்கமாட்டேன். என் தலைவர் ரஜினி சாருக்கு நெருங்கிய நண்பராக எந்த அளவுக்கு மதிக்கிறாரோ, நானும் அந்த அளவுக்கு அவரை மதிக்கிறேன். அதுதான் ரஜினி சாருக்கும் பிடிக்கும். அப்படியிருக்கும் போது எப்படி கமல் சாரைப் பற்றி தவறாகப் பேசத் தோன்றும். 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தவறாகப் போய்விடக் கூடாது.
'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிப்பதற்காக கமல் சார் 3 மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்துப் பேசினார். ஆனால், 'கால பைரவா' படத்தில் நடிப்பதால், என்னால் நடிக்க முடியவில்லை எனக் கூறினேன். இவ்வளவு நெருக்கம் எங்களுக்குள் இருக்கிறது. அதைத் தவறாக நினைக்க வேண்டாம்.
இன்னும் கோபமிருந்தால் எங்கள் வீட்டுக்கு வந்து திட்டுங்கள், அடியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில் தான் ரஜினி சார் - கமல் சார் ரசிகர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்" என்று பேசினார் லாரன்ஸ்.