தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். வழக்கம் போலவே இந்த ஆண்டும் அவர் சென்னையில் இல்லை. அவருக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியத் திரையுலகினர், இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் எனப் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
மேலும், ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். ட்விட்டர் பக்கத்தில் பலரும் வாழ்த்துகளைப் பகிரவே #HappyBirthdaySuperStar #HappyBirthdayRajinikanth ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின.
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ரஜினி வெளியிட்டுள்ள கடிதத்தில், "என் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிகை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்கிறார்.