தமிழ் சினிமா

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் 2: ஹீரோவான இயக்குநர்

செய்திப்பிரிவு

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தில், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமாரே ஹீரோவாக நடிக்கிறார்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்தனர்.

2018-ம் ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது. பலரும் இந்தப் படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், இந்தப் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய 'கஜினிகாந்த்' திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. எனவே, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் 2-ம் பாகத்துக்கான வேலைகளில் இயக்குநர் சந்தோஷ் இறங்கினார்.

இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடிப்பதாகவும், விரைவில் இதில் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் எனவும் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்தார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று (டிசம்பர் 11) தொடங்கியது. சந்தோஷ் பி ஜெயக்குமாரே ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக அவர் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இதுதவிர, அரவிந்த் சாமி நடிப்பில் ‘புலனாய்வு’ என்ற படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.

SCROLL FOR NEXT