ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் பல விதங்களில் 'பிகில்' படத்துக்குத் தொடர்புடையவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை ட்விட்டர் தளம் வெளியிட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக 2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் தளம். அதில் 'விஸ்வாசம்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி 'விஸ்வாசம்' படத்தைப் பற்றியே அதிகம் பேர் பேசியிருப்பதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக ட்விட்டர் இந்தியா ட்விட்டர் பதிவில், "இந்த ட்வீட் குறித்து நீங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது எங்களுக்கும் ஆர்வத்தைத் தருகிறது. ஆனால் இது இந்த வருடம் தாக்கத்தை ஏற்படுத்திய சில விஷயங்களின் பிரதிநிதித்துவமே. 2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட விஷயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலுக்கு நீங்கள் இன்னமும் சற்று காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தது.
தற்போது ட்விட்டர் தளம் #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் 2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இதில் 'பிகில்' திரைப்படத்தின் போஸ்டர் தொடங்கி படக்குழு சம்பந்தப்பட்ட பலரது ட்விட்டர் பக்கங்களும் சாதனை புரிந்திருக்கிறது. இதனை ட்விட்டர் தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ட்விட்டர் தளத்தில் 'பிகில்' படம் செய்த சாதனை பட்டியல்கள் இதோ:
* விஜய் அலுவலகத்திலிருந்து செயல்பட்டு வரும் ட்விட்டர் பக்கத்தில் (@actorvijay) வெளியிடப்பட்ட 'பிகில்' போஸ்டர் தான், பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகமான ரீ-ட்வீட்களும், கருத்துகளும் பெற்ற ட்வீட்டாக ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.
* இந்தியளவில் அதிக முறை உபயோகப்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் படம் 'பிகில்' மட்டுமே. #Loksabhaelections2019 முதலிடத்தில் இருக்கிறது. அந்தப் பட்டியலில் #bigil 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ஹாலிவுட் படமான ’அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படமும் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது
* பெண்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதல் 10 இடங்கள் பெற்ற ட்விட்டர் பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'பிகில்' படம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாகத் தகவல்களை வெளியிட்டு வந்த அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டர் பக்கம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. பல பாலிவுட் நடிகைகளின் ட்விட்டர் பக்கங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டர் பக்கம். இந்தப் பட்டியலில் நடிகை சோனாக்ஷி சின்ஹா முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
* ஆண்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதல் 10 இடங்கள் பெற்ற ட்விட்டர் பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார். அதில் விஜய் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கம் 5-வது இடத்திலும், இயக்குநர் அட்லியின் ட்விட்டர் பக்கம் 10-வது இடத்திலும் உள்ளது. இருவருமே 'பிகில்' படம் தொடர்பாக ட்வீட்களை வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனைகள் பட்டியலில் 'பிகில்' படத்தைத் தவிர, எந்தவொரு தமிழ்ப் படமும் இடம்பெறவில்லை. மேலும், பொழுதுபோக்கு அம்சங்கள் ட்விட்டர் பக்கங்களில் கூட 'பிகில்' படம் சம்பந்தப்பட்டவர்கள் ட்விட்டர் பக்கமே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.