தமிழ் சினிமா

விஜய் படம்: இயக்குநர் ஷங்கர் சூசகம்

செய்திப்பிரிவு

விஜய்யை வைத்து எப்போது படம் இயக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் - விஜய் இணைப்பில் வெளியான படம் 'நண்பன்'. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக்காகும். ஷங்கரின் நேரடிக் கதையில் இதுவரை விஜய் நடிக்கவில்லை.

ஆனால், அவ்வப்போது ஷங்கர் - விஜய் மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை என்ற செய்தி மட்டும் வெளியாகி வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஷங்கர் - விஜய் கூட்டணி தொடர்பான செய்தி வெளியானபோது, இம்முறை இந்தக் கூட்டணி இணைவது உறுதி என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால், அது நடைபெறவில்லை.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 8) தனியார் இணையதளத்தின் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார் ஷங்கர். அப்போது, 'விஜய்யை எப்போது இயக்கவுள்ளீர்கள்' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குநர் ஷங்கர், "நானும் ரெடி.. அவரும் ரெடி.. எப்போது வேண்டுமானாலும் இணைய வாய்ப்புள்ளது" என்று பதிலளித்துள்ளார்.

தற்போது கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு இறுதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை ஷங்கர் முடிப்பதற்குள் விஜய்யும் 'தளபதி 64' மற்றும் 'தளபதி 65' ஆகிய படங்களை முடித்துவிடுவார். ஆகையால் 'தளபதி 66' படம் ஷங்கர் படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT