தமிழ் சினிமா

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது: ரஜினி பேச்சு

செய்திப்பிரிவு

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்று 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும் போது குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நேற்று (டிசம்பர் 7) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

டிசம்பர் 12-ம் தேதி ரஜினிக்கு 70-வது பிறந்த நாளாகும். இந்தப் பிறந்த நாளுக்கும் தான் ஊரில் இருக்கப் போவதில்லை என்று 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசினார். இது தொடர்பாக ரஜினி தன்னுடைய பேச்சில், "வரும் 12-ம் தேதி எனக்குப் பிறந்த நாள். இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். 69 வயது முடிந்து 70 வயதைத் தொடங்குகிறேன். எப்போதும் போல் இந்தாண்டும் பிறந்த நாளன்று ஊரில் இருக்கமாட்டேன். ரசிகர்கள் ரொம்ப ஆடம்பரமாக என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யுங்கள்.

இந்த அரங்கைத் தமிழக அரசு நிர்வாகித்து வருகிறது. இசை வெளியீட்டு விழாவுக்கு பெரும்பாலும் கொடுப்பதில்லை. தமிழக அரசைப் பலமுறை விமர்சித்திருக்கிறேன். அதெல்லாம் மறந்து, இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அரங்கைக் கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலசந்தர் சாருடைய மனதுக்கு ரொம்ப நெருக்கமான பெயர் ரஜினிகாந்த். அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தினாலும், அந்தப் பெயரை யாருக்கு வைக்கலாம் என்று யோசித்து, நல்ல நடிகனுக்குத் தான் வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் எனக்கு வைத்தார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. இவனை வைத்துப் படமெடுத்தால் லாஸாகிவிடும் வேண்டாம் என்று சொன்ன போது, என் மீது நம்பிக்கை வைத்து ஹீரோவாக போட்டு படமெடுத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போல் என்னை நம்பி இதுவரை பணம் போட்ட தயாரிப்பாளர்களுடைய பணம் எதுவும் வீண் போகவில்லை. அதே போல் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண் போகாது" என்று பேசினார் ரஜினி.

SCROLL FOR NEXT