சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 - 19 வரை நடைபெறவுள்ளது. இதில் திரையிட 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும், சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவுள்ளனர்.
தமிழக அரசின் நிதி உதவி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒத்துழைப்பு, சினிமா ஆர்வலர்களின் ஆதரவு ஆகியவற்றுடன் இணைந்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவைக் கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது ஐ.சி.ஏ.எஃப். அதே போல் 17-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
டிசம்பர் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்குகிறது. அன்று, கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற ‘பாராஸைட்’ (Parasite) என்ற கொரிய மொழிப் படம் தொடக்க விழாத் திரைப்படமாகத் திரையிடப்படுகிறது.
உலக சினிமா பிரிவின் கீழ் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா பெல்ஜியம், பிரேசில், ஃபிரான்ஸ், சீனா, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், இஸ்ரேல், ஜப்பான், நார்வே, ஸ்பெயின், கனடா, ரஷ்யா, துருக்கி உட்பட பல நாடுகளின் படங்களிலிருந்து 95 படங்களைத் திரையிடவுள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் அருகருகே அமைந்திருக்கும் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யா கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்தியன் பனோரமா பிரிவில், ‘அமோரி’ என்ற கொங்கனி மொழிப்படம், ‘ஜாவி – தி சீட்’ என்ற அசாமியப் படம், ‘நேதாஜி’ என்ற இருளர் மொழிப் படம் ஆகிய மூன்று படங்கள் முதல் முறையாகத் திரையிடப்பட இருக்கின்றன. மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளி, இந்தி, கரோ – காசி உள்ளிட்ட 13 இந்திய மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
ரூபாய் 7 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட, தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும், தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. இதில் தமிழ்ப் படங்கள் போட்டிப் பிரிவில் திரையிட ’அடுத்த சாட்டை’, 'அசுரன்', 'பக்ரீத்', 'ஹவுஸ் ஓனர்', 'ஜீவி', 'கனா', 'மெய்', 'ஒத்த செருப்பு சைஸ் 7', ‘பிழை’, 'சீதக்காதி', 'சில்லு கருப்பட்டி' மற்றும் 'தோழர் வெங்கடேசன்' ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தனது 90-வது வயதிலும் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நாளில் கலையுலகப் பிரபலங்கள் மத்தியில் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.