வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்யை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அடுத்தகட்டத்துக்கு இந்தப் பேச்சுவார்த்தை நகருமா என்பது விரைவில் தெரியவரும்.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். 'தளபதி 64' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட இயக்குநர் யார் என்று பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏனென்றால் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்துடன் முடிவடையவுள்ளது. அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகக்கூடும்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விஜய் - வெற்றிமாறன் சந்திப்பு நடந்துள்ளது. அது நட்பு ரீதியான சந்திப்பாக இருந்தாலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். இந்தச் சந்திப்பு அடுத்த கட்டத்துக்குக் கண்டிப்பாக நகரும் என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, விஜய்யின் அடுத்த படமாக வெற்றிமாறன் படம் இருக்காது. அவரது 66-வது படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இந்தக் கூட்டணி குறித்த செய்தி, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.