ரவீந்த்ரா மாதவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'நாடோடிகள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் மைக்கேல் ராயப்பன். அதனைத் தொடர்ந்து 'சிந்து சமவெளி', 'தென்மேற்குப் பருவக்காற்று' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தார். இறுதியாக 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தயாரித்தார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவரால் தொடர்ச்சியாகப் படம் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது அதிலிருந்து கொஞ்சம் மீண்டு புதிய படமொன்றைத் தொடங்கியுள்ளார். இதில் நாயகனாக அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் அதர்வா நாயகனாக நடித்த 'ஈட்டி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது தொடங்கப்பட்டு இருக்கும் படத்தை புதுமுக இயக்குநர் ரவீந்த்ரா மாதவா இயக்கவுள்ளார். சுசீந்திரன், பூபதி பாண்டியன், கொரட்டலா சிவா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக மாதவா பணிபுரிந்துள்ளார்.
இந்தப் புதிய படம் குறித்து ரவீந்த்ர மாதவா, "ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக அதர்வா நடிக்கிறார். '100' படத்தில் அதர்வா காவல் அதிகாரியாக நடித்திருந்தாலும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்தப் படம் இருக்கும். ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே சென்னையைச் சுற்றியே நடைபெறவுள்ளது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதில் அதர்வாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் யார் என்பதையும் விரைவில் அறிவிக்கவுள்ளோம். ஒளிப்பதிவாளராக சக்தி சரவணன், கலை இயக்குநராக ஐயப்பன் ஆகியோர் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.