தமிழ் சினிமா

'கைலாசா' கதை தயார்: இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

'கைலாசா' கதை தயார் என்று ட்விட்டர் நடைபெற்ற உரையாடலில் 'கே 13' இயக்குநர் பரத் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் , அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் பொலீஸர் சோதனை நடத்தினர். அப்போது பல சிறுமிகள் மீட்கப்பட்டனர். மேலும், ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர். நித்யானந்தா மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அப்போது தப்பிச் சென்ற நித்யானந்தா ஈக்வேடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு 'கைலாசா' நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இதனைக் கிண்டல் செய்யும் வகையில் இந்தியக் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கைலாச நாட்டிற்குச் செல்வதற்கு விசா பெறுவதற்கான என்ன நடைமுறைகள்?'' எனக் கிண்டலாகத் தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் சதீஷ், "சொல்கிறேன் பக்தா" என்று நக்கலாகப் பதிவிட்டு, தான் நித்தியானந்தா கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சதீஷின் ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் 'கே 13' இயக்குநர் பரத் நீலகண்டன் "கைலாசா" கதை தயார்" என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் பரத்தின் பதிவுக்கு "எப்போ ஸ்டார்ட் பண்ணனும் ப்ரோ" என்று கேள்வி எழுப்பியுள்ளார் சதீஷ்

இந்தக் கிண்டல் பகிர்வுகள், இணையவாசிகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT