இந்த இரண்டு வருடங்களில் நாங்கள் பல பிரச்சினைகளைச் சேர்ந்து எதிர்கொண்டிருக்கிறோம் என்று மணிமேகலை நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. ஹுசைன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2017-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது வரை இவர்களது வீட்டில் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே இன்று (டிசம்பர் 6) இந்தத் தம்பதியினரின் 2-வது ஆண்டு திருமண நாளாகும். இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''டிசம்பர் 6, 2017 - சம்பவம் நடந்த நாள். சென்னை பாரிமுனை பதிவாளர் அலுவலகத்தில். இந்த ஜென்மத்தில் எனக்குக் கிடைத்த விலை மதிக்க முடியாத நாள். இந்த இரண்டு வருடங்களில் நாங்கள் பல பிரச்சினைகளைச் சேர்ந்து எதிர்கொண்டிருக்கிறோம். வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கவில்லை என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்கள் என் பக்கத்தில் இருப்பது என் ஆசிர்வாதம். நமது திருமண நாளில் உங்கள் முகத்திலிருந்த அதே புன்னகையுடன் நமது எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ள எனக்குத் தைரியம் தந்தீர்கள். உங்களுக்கு நான் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்ட நீங்கள் தவறியதே இல்லை.
நாம் திட்டம் போட்டது போல ஒரு சில்வர் நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கும் வரை ஓயக்கூடாது. நான் எப்போதும் சொல்வது போல நம் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நான் உங்களுக்காகத் துணை நிற்பேன். நம் திருமண வாழ்க்கையின் இன்னொரு வருடத்தை உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறேன். இரண்டாவது திருமண நாள் வாழ்த்துகள்’’.
இவ்வாறு மணிமேகலை தெரிவித்துள்ளார்.