எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட நான் பார்க்கவில்லை என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பின்னணிப் பாடகி சுசித்ரா. 2017-ம் ஆண்டு இவரது ட்விட்டர் பக்கத்தில் 'சுசி லீக்ஸ்' என்ற பெயரில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவரது கணவர் கார்த்திக் குமார் தெரிவித்தார். பின்னர், சுசித்ரா - கார்த்திக் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரி சுஜிதா வீட்டில் தங்கியிருந்தார் சுசித்ரா.
நவம்பர் 11-ம் தேதி முதல் சுசித்ராவைக் காணவில்லை என்றும், கண்டுபிடித்துத் தருமாறும் சென்னை அடையாறு காவல் நிலையத்தில் சுசித்ராவின் தங்கை சுஜிதா புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தனக்கும் தங்கைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வந்துவிட்டதாக போலீஸாரிடம் சுசித்ரா தெரிவித்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார் சுசித்ரா. அதில், "நாலரை லட்சம் பேர் ஃபாலோ பண்ணுகிற எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களால் நிறைய பேருக்கு பிரச்சினை உண்டானது. அதனால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதற்கு இன்னொரு காரணம் என் விவாகரத்தும் கூட. ஒரே சமயத்தில் இரண்டு பிரச்சினைகள் என்பதால், கொஞ்சம் கடினமாக இருந்தது.
எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட நான் பார்க்கவில்லை. அதில் தனுஷ், அனிருத்தை தேவையில்லாமல் இழுத்துவிட்டனர். அந்த வீடியோக்களை எல்லாம் நானும் பார்த்தேன் என்ற பங்களிப்பு எனக்கு வேண்டாம்.
அது மார்பிங் வீடியோவா என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. அதை நினைத்தாலே இப்போதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதை யார் செய்தார்கள் என்பது போகப் போகத் தெரிய வரலாம். அந்தப் பிரச்சினையைக் கடந்துதான் போய் ஆக வேண்டும். அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சரி செய்யவே முடியாது. ஆகையால் யாருடனும் தொடர்பில் இல்லை.
எனது ட்விட்டர் கணக்கு பிரச்சினையான சமயத்தில் படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த கலை சமையல் கலை. லண்டனுக்குச் சென்று ப்ரெஞ்ச் சமையல் கலையைக் கற்றுக்கொண்டு திரும்ப வந்துள்ளேன். அந்தச் சமையல் கலையை யூ டியூப் சேனலில் தமிழில் இலவசமாக கற்றுக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் சுசித்ரா.