தமிழ் சினிமா

'பொன்னியின் செல்வன்' அப்டேட்: அமிதாப், த்ரிஷா ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியிருப்பது உறுதியாகியுள்ளது.

'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. லைகா நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தில் தான் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்திய லால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடன் நடிக்கவுள்ள நடிகர்களின் பட்டியலைத் தெரிவித்துள்ளார். அதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயருடன் அமிதாப் பச்சன் மற்றும் த்ரிஷா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது, த்ரிஷா ஒப்பந்தமாகியிருப்பதை உறுதி செய்தனர். ஏற்கெனவே, மணிரத்னம் இயக்கத்தில் 'ஆய்த எழுத்து' படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் அவர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக தோட்டாதரணி, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT