தமிழ் சினிமா

'பாரம்' படத்தை வெளியிடும் வெற்றிமாறன்

செய்திப்பிரிவு

இந்த ஆண்டு சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை வென்ற 'பாரம்' படத்தை வெளியிடுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

18 நாள்களில் எடுக்கப்பட்ட ‘பாரம்’ தமிழ்த் திரைப்படத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலரும், இது எப்போது வந்த படம், யார் நடித்துள்ளார்கள் எனப் பலரும் தேடினார்கள். ஆனால், அந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் பிரியா கிருஷ்ணசாமி. இவர் மும்பையில் வசித்து வரும் தமிழர்.

‘தலைக்கு ஊத்தல்’ முறையில் உடல்நலம் குன்றிய முதியோரைக் குடும்பத்தினரே கொலை செய்யும் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ‘பாரம்’. “இந்தப் படம் கலைப் படைப்பு அல்ல. மக்கள் பார்க்க வேண்டிய படம். மனத்தின் ஆழத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உயிரோட்டமான படம் இது. மக்களிடம் அதிகம் சென்று சேரவேண்டிய படமும்கூட” என்று தெரிவித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள பிரியா கிருஷ்ணசாமி.

இன்னும் வெளியாகாமல் உள்ள இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட உள்ளார். இது தொடர்பாக வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்கு நேர்மையாக இருக்கும் ஒரு படத்தைக் காண்பது நமக்கு மிகமிக அரிதாகவே உள்ளது. அவ்வகையில் பிரச்சினையை மிகச் சரியாகப் பேசியுள்ள வகையில் 'பாரம்' ஒரு முக்கியமான படம்.

இப்படம் நம்மைச் சுற்றியுள்ள உலகைக் குறித்து நமது அக்கறை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைக் குறித்து ஆராய்கிறது. நமது அலட்சியமான இயல்புகளை அம்பலப்படுத்துகிறது. ஒரு தீவிரமான மற்றும் புதிரான கதைக்களனை இப்படம் கொண்டுள்ளது.

நான் 'பாரம்' படத்தைப் பார்த்தபோது ஏதோ ஒருவகையில், இப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். அதை வழங்கவும் முடிவு செய்தேன். 'பாரம்' திரைப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT