கர்நாடகாவின் ஷிமோகா சிறையில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புதுடெல்லியில் நடந்து வந்தது. தற்போது ஷிமோகா சிறையில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் இப்போதைக்கு தளபதி 64 என்ற பெயரிலேயே அறியப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். டிசம்பர் 1 முதல் ஜனவரி 18 வரை இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படப்பிடிப்புக்காகவே, சிறையின் முகப்புக்கு புதிய வண்ணத்தை பூசியுள்ளது படப்பிடிப்புக் குழு.
ஷிவமொக்கா என்ற ஷிமோகாவில், 1897-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட சிறை, இந்தியாவின் பழமையான சிறைகளில் ஒன்று. பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரத்துக்குப் பின் இந்தச் சிறை, மாவட்ட சிறை என்று அறியப்பட்டது. பல்வேறு கன்னடத் திரைப்படங்களின் படப்பிடிப்பு இந்தச் சிறையில் நடைபெற்றுள்ளது.