கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படக்குழுவினருக்கு, ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், தினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ்.இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பாடல்கள் இல்லை, நாயகி இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை என்ற வித்தியாசமான களத்துடன் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சனரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வசூலிலும் குறை வைக்கவில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தென்னிந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
தற்போது ஹாட் ஸ்டாரில் படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில், "இப்போதுதான் 'கைதி' படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். மன்னித்துவிடவும், ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்தேன். சீட்டு நுனிக்கே கொண்டு வரும் அனுபவம்.
ஒரே ராத்திரியில் நடக்கும் கதை என்பதால் படத்தின் எல்லா அம்சங்களும் சரியான முறையில் இருக்கின்றன. வாழ்த்துகள் லோகேஷ், கார்த்தி. உங்கள் வேலை பேசுகிறது. சத்யா, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
'கைதி' படத்தின் ஒளிப்பதிவாளரான சத்யன் சூரியன், பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.