'நந்தினி' சீரியல் மூலம் பிரபலமான நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
'மொட்டு மனசே' என்ற கன்னடப் படத்தின் மூலமாகத் திரையுலகில் நடிக்க வந்தவர் நித்யா ராம். அதற்குப் பிறகு திரையுலகில் சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால், சீரியல்கள் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். தமிழில் 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அவள்' சீரியல் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளின் சீரியல்களில் நடித்து வந்தார்.
ஆனால், சுந்தர்.சி தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' சீரியல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து கன்னடத்திலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பலரும் இவரை 'நந்தினி' நித்யா ராம் என அழைக்கத் தொடங்கினார்கள். தற்போது குஷ்பு நடித்து வரும் 'லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியலிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மிகவும் பிரபலமான நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கவுதமைத் திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளார் நித்யா ராம். இதனால், இனிமேல் அவர் சீரியலில் நடிக்கமாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது காதல் திருமணம் என்ற தகவலை நித்யா ராம் மறுத்துள்ளார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் தெரிவித்துள்ளார். இருவரது திருமணமும் விரைவில் நடைபெறவுள்ளது. முன்பாக, 2014-ம் ஆண்டு வினோத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் நித்யா ராம். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.